யாழ்.சுதுமலையில் டெங்கு அதிகரிப்பு – ஒரு வாரத்தில் 10 வயதிற்கு உட்பட்ட 13 சிறுவர்களுக்கு டெங்கு
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 பேர் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில் குறித்த பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலைமையில் அப்பகுதி கிராம சேவையாளர் , டெங்கு தடுத்து உத்தியோகஸ்தர்கள் இணைந்து வீட்டு தரிசிப்பில் ஈடுபட்டனர்.
அதன் போது டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை துண்டு வழங்கப்பட்டதுடன் , நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட வளாக குடியிருப்பாளர்கள் நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மன்றில் முன்னிலையான மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து , அவர்களுக்கு தலா 4ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. மன்றில் முன்னிலையாகாத குடியிருப்பாளருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை நுளம்பு பரவ கூடிய சூழல் காணப்பட்ட வெற்று காணி உரிமையாளர்களுக்கு, அக்காணிகளை துப்பரவு செய்வதற்கு 07 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.