சீனாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31-ஆக உயர்வு
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்றுமுன் தினம் (ஜன.22) காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 47 பேர் மாயமாகினர். மேலும் அப்பகுதியில் வசித்த 200க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த 33 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 இயந்திரங்களுடன் 1000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று (ஜன.23) நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 31 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதி முழுவதும் பனி படர்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாகவும், மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.