;
Athirady Tamil News

கூட்டமைப்பை மீட்டெடுக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்: சிறீதரன் உறுதி

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு எத்தனை விட்டுக் கொடுப்புகளையும் தியாகங்களையும் செய்யத் தயாராக உள்ளேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசத்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சியின் முக்கிய பலம் தமிழ்த் தேசியம். அது மாவீரர்களின் கல்லறையிலிருந்தே தொடங்க வேண்டும்.

தியாகங்களை செய்ய தயார்
இதன் காரணமாக, தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளேன்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசிய சக்திகளின் அணிகள் அனைத்தையும் ஒன்றிணைப்பேன்.

மேலும், தலைமை என்ற எதிர்பார்ப்பின்றி அனைவரையும் ஒன்றிணைக்க என்னால் முடிந்த இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன். இதற்காக எத்தனை விட்டுக் கொடுப்புகளையும் தியாகங்களைம் செய்ய நான் தயாராக இருக்கின்றேன்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பயணத்தை நோக்கி அனைவரையும் அரவணைத்து தியாக உணர்வோடு உழைக்க வேண்டும்.

13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடையாது. ஒற்றையாட்சிக்குள் எட்டப்படும் தீர்வு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாது.

புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
13 இல் உள்ள பல விதிகளை இலங்கை அரசு மாற்றியுள்ளது. அத்தோடு, 13இன் மூலமாகத் தீர்வை எட்ட முடியும் என்றும் நாம் யாரும் நினைக்கவில்லை.

தமிழரின் நிலம், மொழி, கலாசார அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கில் இணைந்த ஒரு தீர்வை நோக்கியே நாம் பயணிக்கின்றோம்.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீக மக்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக்குழு என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

எங்கள் பயணம் இந்தத் திசையிலயே அமைகின்றது. அதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று நம்புகின்றோம். மற்றக் கட்சிகளுடன் இணைந்து பொதுவான ஒரு தளத்தில் பயணிக்கவும் பொதுவான அரசியல் கொள்கையை உருவாக்கவும் வழியேற்படுத்துவேன்.

முன்னதாக, வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் சமூக மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் வெளிப்படையான ஜனநாயக உரையாடலை நடத்துவதுடன், புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புகளுடனம் பேச்சுகளை நடத்துவேன்” என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.