புகையிலை வாங்கியவரிடம் ஏமாந்து நிற்கும் யாழ் விசாயிகள்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், புகையிலை வாக்கியவர் பணத்தை கொடுக்காததால் ஏமாந்துநிற்கும் அவலநிலையில் தமக்கான நீதியை பெற்றுதருமாறு கோரி நிற்கின்றனர்.
நம்பிக்கை அடிப்படையில் அப் பகுதியை சேர்ந்த வியாபாரியிடம் உலர்த்திய புகையிலையை விற்பனைக்காக கொடுத்த நிலையில், வியாபாரி உரிய பணத்தை கொடுக்காது ஒருவருட காலமாக இழுத்தடிப்பு செய்வதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ் அரச அதிபரிடம் கோரிக்கை
இந்நிலையில் வியாபாரி நம்பிக்கை மோசடி செய்து தலைமறைவானதை அறிந்த விவசாயிகள், அது தொடர்பில் யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் பொலிஸாரும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஊடாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகள் ஆகிய நாங்கள் கடந்த 2023 ஆண்டு புகையிலைகளை பயிர் செய்து அதனை எங்கள் வாழ்வாதாரமாக மேற்கொண்டோம்.
உலர்த்திய புகையிலைகளை நம்பிக்கை அடிப்படையில் எமது பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிப்பவருக்கு விற்பனை செய்தோம். அவர் அதற்கான பணத்தினை கடந்த 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்பு தருவதாக கூறினார்.
எனினும் அவர் பணத்தை குறித்த தவணையில் கொடுக்காததால் அது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து பின்னர் சட்டத்தரணி ஊடாக பிணையில் விடுதலை செய்தனர்.
இந்நிலையில் அவர் பணத்தினை ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பு வழங்குவதாக சட்டத்தரணி ஊடாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் முன்னிலையிலும் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினார்.
ஆனால் குறித்த திகதியில் நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது அவர் சமுகம் தரவில்லை என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இதனால் 35 பேருக்கு மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்கள் பணத்தினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.