;
Athirady Tamil News

பௌத்த பிக்கு போர்வையில் வாழ்ந்த பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் கைது

0

நாட்டிலுள்ள வங்கிகளில் போலியான தங்கத்தை அடகு வைத்ததற்காக 19 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர், பிக்கு போர்வையில் வாழ்ந்து வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பகுதியிலுள்ள தியான நிலையம் ஒன்றில் பிக்கு போன்று வாழ்ந்த வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் வங்கி ஒன்றின் 24 கிளைகளில் தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க ஆபரணங்களை தயாரித்து அடகு வைத்து சுமார் 50 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக ஜயம்பதி அலுவிஹாரே என்ற நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

19 பிடியாணைகள்
இந்நிலையில் குறித்த தனியார் வங்கியினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதன் பிரகாரம் சந்தேகநபரை கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், 2008ஆம் ஆண்டு முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

மேல் நீதிமன்றத்தின் 12 பிடியாணைகள், நீதவான் நீதிமன்றங்களில் 07 பிடியாணைகள் மற்றும் நிலுவையில் உள்ள 04 வழக்குகள் தொடர்பில் சந்தேகநபர் நீதிமன்றினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னரே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் 2008ஆம் ஆண்டு முதல் காணாமல் போன சந்தேக நபரை தேடுவதற்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மஹேஷிகா முத்துமாலை உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பிக்குவாக இருந்த நிலையில் கைது
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த சந்தேக நபர் அவிசாவளை பிரதேசத்தில் உள்ள பிரபல தியான நிலையம் ஒன்றில் பிக்குவாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

சந்தேகநபர் 2008ஆம் ஆண்டு மஹரகம ரதன தேரராக நியமிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் தியான நிலையத்தில் பிக்குவாக வசித்து வந்துள்ள நிலையில் நேற்று (26) பிற்பகல் விசாரணை அதிகாரிகள் சந்தேக நபரை தியான நிலையத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.

குறித்த தியான நிலையத்திற்கு பொறுப்பான தேரர், மஹரகம ரதன பிக்குவாக வாழ்ந்தவரின் காவி உடையை அகற்றி சாதாரண நபர் போன்று ஆடைகளை அணிவித்து விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இதேவேளை குறித்த சந்தேக நபர் இன்று (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.