என்னை தீர்மானித்தது இந்தியா அல்ல! யாருடனும் இணையத் தயார் – சிறீதரன் அறிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ விவகாரத்தில் இந்தியா தலையிடவில்லை என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுமந்திரன் இயல்பானவர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு யார் வந்தாலும் அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் தான் இந்தியா இருக்கின்றது. இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு என்றும் உறுதியானது.
ஜனநாயக ரீதியில் உள்ளக மட்டத்தில் தேர்தல் இடம்பெற்றது. கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
நண்பர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்மறையானவரல்ல. இயல்பானவர். எனது செயற்பாடுகளுக்கும், அவர் முழமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக உள்ளது.
கட்சியின் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவும் விலகிச் சென்ற சிரேஷ்ட தலைவர்களை ஒன்றிணைக்கவும் அனைவரது ஒத்துழைப்புடனும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீவிர கரிசனை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.