ரஷிய போருக்கு ஆயுதக் கொள்முதல்:உக்ரைனில் 40 மில்லியன் டாலா் ஊழல்: 5 போ் மீது வழக்குப் பதிவு
ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ஒரு லட்சம் பீரங்கி குண்டுகள் வாங்குவதில் உக்ரைனில் 40 மில்லியன் டாலா் வரை ஊழல் நடந்திருப்பதாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புப் பணி முகமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஆயுதத் தயாரிப்பு நிறுவன ஊழியா்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு ஊழலில் தொடா்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களில் ஒருவா் உக்ரைன் எல்லையைக் கடந்து தப்ப முயன்றபோது சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவா்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உக்ரைன் சேரவிருக்கும் நிலையில் ஊழல் தொடா்பான விசாரணையை அந்நாடு துரிதப்படுத்தியுள்ளது. உறுப்பினராக சோ்க்கப்படுவதற்கு முன்னா் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இரு அமைப்பினரும் உக்ரைனிடம் வலியுறுத்தியதையடுத்து இந்த நடவடிக்கையை உக்ரைன் மேற்கொண்டது.
இதுதொடா்பாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘2022, ஆகஸ்ட் மாதத்தில் 40 மில்லியன் டாலா் செலவில் 1 லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்க ‘லிவிவ் அா்சனல்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமானது.
இதற்கான மொத்தத் தொகையும் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டது. அதைப் பெற்றவுடன் வெளிநாட்டிலுள்ள நிறுவனத்தின் வணிகப் பிரிவுக்கு ஊழியா்கள் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஒப்பந்தமிட்ட ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால், நாட்டிலுள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஒப்பந்தத் தொகை பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கோரிய ஆயுதங்கள் விநியோகிக்கப்படவில்லை. இதையடுத்து வங்கிக் கணக்கிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டு நாட்டின் பாதுகாப்பு நிதிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.