;
Athirady Tamil News

பிரித்தானியாவில் புலம்பெயர்தல் தொடர்பில் நடைமுறையாகும் கட்டுப்பாடுகள்

0

பிரித்தானியாவில் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைக்க நடவடிக்கைகள், இன்னும் சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என பிரித்தானிய உள்துறைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

முன்னதாக சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

அதன்படி புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயற்சிப்போரை கட்டுப்படுத்தும் விதிகள் மார்ச் மாத துவக்கம் முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

குறிப்பாக கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை என்பது தெரியவருகிறது.

வருமான வரம்பு உயர்வு
மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல், முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணி செய்வோர், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவருவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதனையடுத்து ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாகவும் உயர்த்தப்பட உள்ளது.

மேலும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளதுடன், அது படிப்படியாக அதிகரிக்கவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, மாணவர் விசாக்களுக்கான மாற்றங்கள், ஜனவரி மாத துவக்கத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது அரசின் நிதி உதவி மூலம் ஸ்காலர்ஷிப் பெறும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வாழ பிரித்தானியாவுக்கு அழைத்துவரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமன்றி இன்றிலிருந்து (31.01.2024) உலகின் பிற பகுதிகளுடன் பிரித்தானியா எவ்வாறு வர்த்தகம் செய்கிறது என்பதிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதுடன் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், விசிட்டர் விசாவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.