நான் எதற்காக அரசியல் கட்சி தொடங்கினேன்! நடிகர் விஜய் வழங்கியுள்ள விளக்கம்
தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய புதிய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
அத்துடன் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவராகவும் நடிகர் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 3பக்க அறிக்கையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிக்கான விளக்கம்
தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையிலேயே நான் ஏன் அரசியல் கட்சி தொடங்குகிறேன் என்ற விளக்கத்தை கூறியுள்ளார்.
அதில், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் உள்ளது, மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாசாரம்” மறுபுறம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக் கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்ன முடிந்த வரையில் உதவ வேண்டும் என்ற என்னுடைய நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.
ஒரு தன்னார்வ அமைப்பால் மட்டும் சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்தம் கொண்டு வர இயலாது, அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
அரசியல் எனக்கு மற்றொரு தொழிலோ பொழுதுபோக்கோ அல்ல, ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளேன் என விஜய் தன்னுடைய அரசியல் பயணத்திற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.