;
Athirady Tamil News

தமிழர்களுக்கு இலங்கையில் சுதந்திரம் இல்லை: வேதனை வெளியிட்ட போராட்டக்காரர்கள்

0

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கவனஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டம் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி காந்திபூங்கா வரையில் சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பொலிஸாரினால் வீதிகள் மறிக்கப்பட்டதுடன், கலகமடக்கும் பொலிஸார், கலகமடக்கும் விசேட அதிரடிப்படை பிரிவு, கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தும் வாகனங்கள் பிரதான வீதியில் நிறுத்தப்பட்டு வீதியில் தடைகள் போட்டு மறிக்கப்பட்டது.

மேலும், காந்தி பூங்கா மற்றும் வெபர் மைதானங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதன் காரணமாக பேரணி செல்லவோ, போராட்டம் நடாத்தவோ முடியாது என 14 பேரின் பெயர்கள் கொண்டு தடையுத்தரவினை மட்டக்களப்பு பொலிஸார் பெற்றிருந்ததுடன், பேரணி நடைபெற்றால் பேரணியில் செல்வோர் கைதுசெய்யப்படுவார்கள் என ஒலிபெருக்கி ஊடாக அங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

கடும் மழைக்கும் மத்தியில் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சுற்றி பாதுகாப்புகளை பலப்படுத்தி தடைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் பிரதான வீதியில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் மட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க உறுப்பினர்கள், வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு இல்லையென்பதை காவல்துறையினர் இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டடத்தின்போது, வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், காணி அபகரிப்புகள், வலிந்து காணாமலாக்கப்பட் உறவுகளுக்கான நீதியைப்பெற்றுக்கொடு போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியாவாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, வேலன் சுவாமிகள் மற்றும் அருட்தந்தையர்களுடன் பொலிஸார் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டதுடன் அவர்களினை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டதை காணமுடிந்தது.

இந்த போராட்டம் நடைபெறும் பகுதியில் பெருமளவு புலனாய்வுத்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இராணுவ மற்றும் பொலிஸார் வீடியோ பதிவுகளை பதிவுசெய்து அச்சுறுத்தும் நிலைமையும் ஏற்பட்டது.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்திய பிரகடனம் வாசிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.