யாழ். இராச வீதியில் அதிகரித்துள்ள வழிப்பறி
யாழ்ப்பாணம் , கோப்பாய் – இராச வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை , மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
அதன் போது , நிலைதடுமாறி குறித்த பெண் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த வீதி ஆள் நடமாட்டம் குறைந்த வீதியாக காணப்படுவதனால் , வழிப்பறி கொள்ளையர்கள் அதனை சாதகமாக்கி வழிப்பறிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும் , இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , வழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என அவ்வீதி ஊடாக பயணிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீதிக்கு அருகில் உள்ள பருத்தித்துறை வீதி , பிரதான வீதியாகவும் , போக்குவரத்து நெரிசலாகவும் காணப்படுவதனால் , துவிச்சக்கர வண்டி , மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் , இந்த வீதியூடாகவே பயணிக்கின்றனர்.
அதனை அவதானிக்கும் வழிப்பறி கொள்ளையர்கள் , வழிப்பறிகளை மேற்கொண்ட பின்னர் பிரதான வீதியூடாக வேகமாக பயணித்து தப்பி செல்கின்றனர்.