கோமாவிலிருந்து மீளவைத்த நகைச்சுவை!
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த ஜென்னிஃபர் எனும் பெண் கடந்த 2017 செப்டம்பரில் சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு கோமா நிலையை அடைந்தார். ஐந்து வருடங்கள் கோமாவிலிருந்த பெண், தன் தாய் சொன்ன நகைச்சுவைக்கு சிரித்து கோமாவிலிருந்து வெளியில் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோமாவிலிருந்து மெதுவாக மீண்டுவரும் ஜென்னிஃபர் தனது மகனின் விளையாட்டுப் போட்டியில் பார்வையாளராகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜென்னிஃபரின் தாய் பெக்கி மீன்ஸ், கோமாவிலிருந்த தன் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மெதுவாகச் சிரித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் நாளுக்கு நாள் மெதுவாக அவர் குணமடைய ஆரம்பித்துள்ளது அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் முழுதாக குணமடைந்திடாத ஜென்னிஃபர் பேசுவதற்கும், உடல் அசைவுகளுக்கும் தொடர்ந்து பயிற்சி பெற்று முன்னேற்றம் கண்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்வு தொடர்பான வலைதளப்பதிவு பிரபலமான நிலையில், ‘அது என்ன ஜோக்’ எனப் பலர் கமெண்ட் செய்துவருகிறார்கள். உண்மையில் சிரிப்பே மருந்து எனப் புரிய வைத்த இந்த நிகழ்வு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.