TIN இலக்கம் தொடர்பில் அழைப்பேற்படுத்தினால் அவதானம் : பொது மக்களுக்கு எச்சரிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும் ஹேக்கர் கும்பல் இயங்கி வருவதாக குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை இழந்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
TIN இலக்கம்
அரச வங்கியின் பணியாளர்கள் என அழைக்கும் கும்பல் TIN இலக்கம் தொடர்பாக வங்கியில் கணக்கை எவ்வாறு பராமரிப்பது என்று தெரிவிக்கிறார்கள், பின்னர் கணக்கை அமைக்க வேண்டிய வங்கி வாடிக்கையாளரின் பண பரிமாற்ற கடவுச்சொல்லை (OTP) கேட்கிறார்கள்.
தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு விசாரிக்காமல் இந்த ரகசிய எண்ணை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.
இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் மோசடி கும்பல் தாம் தொடர்பு கொண்ட நபரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளதாக குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.
மோசடி கும்பல்
இவ்வாறு தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றி இந்த மோசடி கும்பல் நேற்று குருநாகல் நகரிலுள்ள பிரதான கல்வி நிறுவனமொன்றில் பணியாற்றும் நபரின் கணக்கில் 2 லட்சத்து 60000 ரூபாவை மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் வேறொருவரின் கணக்கிலிருந்து 10லட்சம் ரூபா பணம் பெற்றுள்ளதாக அரச வங்கியொன்றின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தொலைபேசியில் அழைத்து தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என மக்களுக்குத் தெரிவிக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர், இது தொடர்பில் குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாக மக்களுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.