விசா இல்லாமல் பயணம்: இந்தியர்களுக்கு 4 கட்டுப்பாடுகளை விதிக்கும் ஈரான்
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்க ஈரான் அரசு முடிவெடுத்துள்ளது. இது பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், விசா இல்லாமல் இந்திய சுற்றுலா பயணிகள் 15 நாள்கள் ஈரானுக்கு வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும் என்றும், ஆனால், அவர்கள் சுற்றுலா பயணிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விசா இல்லாமல் ஈரான் பயணிக்க, அந்நாட்டு அரசு, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு நான்கு முக்கிய விதிமுறைகளை மட்டும் அறிவித்துள்ளது.
அதில்,
இந்தியர்கள், சாதாரண பாஸ்போர்ட் வைத்திருந்தால் அவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை 15 நாள்கள் ஈரானுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஒருபோதும் 15 நாள்களுக்கு மேல் ஒரு நாள் கூட நீட்டிக்கப்படாது.
சுற்றுலா வருவதற்கு மட்டுமே இந்த விசா சலுகையை இந்தியர்கள் பயன்படுத்த முடியும். பயன்படுத்த வேண்டும்.
ஒருவேளை ஆறு மாதத்துக்குள் மீண்டும் வர வேண்டும் என்றாலோ, 15 நாள்களுக்கு மேல் தங்க வேண்டும் என்றாலோ, வருவதற்கான காரணங்கள் வேறாக இருந்தாலும் கண்டிப்பாக விசா பெற்றுத்தான் வர வேண்டும்.
விமானம் வழியாக இந்தியாவிலிருந்து ஈரானுக்கு வரும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த விசா இல்லாமல் வருகை தரும் வசதி பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இந்தியர்களுக்கு விசா இல்லாமல் அனுமதிக்கும் நாடாக ஈரான் சேர்ந்துள்ளது. ஏற்கனவே, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை போன்ற நாடுகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ஈரானும் இந்தியா மட்டுமல்லாமல் ரஷியா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 33 நாடுகளுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளது.