ஆசிரியர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை: வெளியாகப்போகும் புதிய சுற்றறிக்கை
தென் மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், தாங்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலித்து அவர்களை உதவி வகுப்புகளுக்கு அழைத்து வருவதற்கு தடைவிதித்து புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான சுற்று நிருபம் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பாவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக தென் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை
இதன்படி, தென் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தப் புதிய சுற்றறிக்கை பொருந்துமென தெரிவிக்கப்படுகிறது.
உத்தரவை மீறும் மாகாண சபை பாடசாலை ஆசிரியர்களுக்கு எதிராக மாகாண கல்வி அமைச்சு நேரடியாக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளும் என தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்துள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவு
அத்துடன், இந்த சுற்றறிக்கையை மீறும் தென் மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களை விசாரிப்பதற்காக தென்மாகாண கல்வி அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சட்டம் இரண்டு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் ஆய்வு செய்த பின்னர் தென் மாகாணத்திலும் இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.