ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்திற்கு எதிரான டயானா கமகேவின் வழக்கு ஒத்திவைப்பு
கட்சி உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த பதவிநீக்க மனுவை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற அமர்வு உரிய வகையில் அமைக்கப்படாமை காரணமாகவே இந்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த வழக்கை பெப்ரவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டயானா கமகே சமர்ப்பித்த மனு
தம்மை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான முடிவு, 08 அக்டோபர் 2021 திகதியிட்ட கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டமயானது, கட்சியின் யாப்பை மீறும் செயல் என்று டயானா கமகே தனது மனுவில், குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததையடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயானா கமகே மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுதாரரான தாம், அரசாங்கத்தின் உறுப்பினர் அல்ல என்றும், கட்சியின் அரசியலமைப்பின்படி சுதந்திரமாகவும், தனது மனசாட்சிக்கு இணங்கவும் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் டயானா கூறியுள்ளார்.
இந்தநிலையில் தமது மனுவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், அதன் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலரை டயானா கமகே பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.