;
Athirady Tamil News

பதவி துறந்தார் ஹங்கேரிய அதிபர்

0

துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தால் ஹங்கேரிய அதிபர் தனது பதவியிலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (09) ஹங்கேரி மக்கள் ஒன்று திரண்டு அதிபர் மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் எதிர்க்கட்சிகளும் அதிபரை பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு அந்நாட்டு அதிபர் கடலின் நோவாக் பொதுமன்னிப்பு வழங்கிய விடயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வேறு வழியின்றி தனது பதவியிலிருந்து அதிபர் கடலின் நோவாக் விலகியுள்ளார்.

முதல் பெண் அதிபர்
46 வயதான கடலின் நோவாக் பொதுமன்னிப்பு விவகாரத்தில் தாம் தவறிழைத்ததாக குறிப்பிட்டு, பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், அத்துடன் தமது செயல் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தியிருக்கும் என நம்புகிறேன் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும் தாம் எப்போதும் முன்நிற்பேன் என்பதை உறுதி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டின் முதல் பெண் அதிபராக கடலின் நோவாக் பொறுப்புக்கு வந்தார்.

இதன்போது, சிறுவர் காப்பகங்களுக்கான முன்னாள் துணை இயக்குநர் ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதே தற்போது அவரது அதிபர் பதவியினை பறிக்கும் அளவிற்கு கொண்டு சேர்த்துள்ளது.

சிறுவர் துஸ்பிரயோக விவகாரம்
குறித்த முன்னாள் துணை இயக்குநர் தமது மேலதிகாரியின் சிறுவர் துஸ்பிரயோக விவகாரத்தை மூடிமறைக்க உதவியதாக இருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் குறித்த முன்னாள் துணை இயக்குநருக்கு அதிபர் கடலின் நோவாக் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார், ஆனால் இந்த விடயம் கடந்த வாரம் தான் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

இதனையடுத்தே பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அதிபரிற்கு அழுத்தம் கொடுத்த நிலையில் அதிபர் கடலின் நோவாக் தனது பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.