செந்தில் பாலாஜி ராஜினாமா; திடீர் முடிவுக்கு என்ன காரணம் – இனி ஜாமீன் கிடைக்குமா?
செந்தில் பாலாஜி ராஜினாமா
சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
தொடர்ந்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. செந்தில்பாலாஜி, ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏழு மாதங்களுக்கு மேலாக 15 தடவைக்கு மேல் ஜாமின் மனு கேட்டு, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
என்ன காரணம்?
இந்நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை சிறை அதிகாரி வழியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார் என தகவல் வெளியானது. ஆனால், அரசு தரப்பிலோ கவர்னர் மாளிகை தரப்பிலோ இந்த விஷயம் குறித்து எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
அமைச்சராக நீடிப்பதால், செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என அமலாக்கத்துறை ஆட்சேபம் தெரிவித்து வந்ததால் ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன. தற்போது, அவர் ராஜினாமா செய்து விட்டதால், ஜாமின் கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாகி இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், தேர்தல் நெருங்கும் நிலையில், அவப்பெயர் ஏற்படுவதை தடுப்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு அரசு தரப்பில் இருந்து செந்தில் பாலாஜிக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.