கெஹெலியவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தில் சமூகமளிக்காமை தொடர்பில் வெளியான காரணம்
புதிய இணைப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு அவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினாலேயே அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வழக்குடன் தொடர்புடைய ஏனைய ஏழு சந்தேக நபர்களும் இன்று(15) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
பாவனைக்கு உதவாத தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 03 ஆம் திகதி அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் இன்றைய தினம் (15) அவருக்கு எதிரான வழக்கு மாளிகாகந்தை நீதிமன்ற நீதவான் லோசனா அபேவிக்கிரம முன்னிலையில் சற்று முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு இன்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் தரமற்ற மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து கடந்த 02 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு
அதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 03 ஆம் திகதி மாளிகாகந்த நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்திய போது நீதிமன்ற உத்தரவின் பேரில் கெஹெலிய இன்று(15.02.2024) வரை விளக்கமறியல் வைக்கப்பட்டார்.
பின்னர் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வில் கெஹெலிய கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலும் அவர் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் இன்றைய தினம் அவர் மாளிகாகந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதும் சந்தேகத்தை ஏற்படுத்துதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.