தண்டவாளத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பஞ்சாபில் ரயில் சேவை முடக்கம்
விவசாயிகளின் போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பேரணியை நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தடுப்புகளை தகர்த்து முன்னேறும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அம்பலா அருகே உள்ள ராஜ்புரா, பர்னாலா உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், விவசாயிகள் திடீரென தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தால், ஸ்ரீ கங்காநகர் – பதிண்டா ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் சில ரயில்கள் பகுதியாக ரத்தான நிலையில், ஆறு ரயில்கள் வேறு வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டன.
இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ள நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய பிரதான அமைப்புகள் தான் டெல்லியை நோக்கி செல்லும் பேரணிகளை முன்னெடுத்துள்ளன. ஆனால், டெல்லியை நோக்கி வரும் விவசாயிகளை முன்னேற விடாமல் அதிகளவு காவலர்களும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.