இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்! யாழ். மீனவர்கள் எச்சரிக்கை
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவர்களால் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடாத்தப்படுகிறது.
எங்கள் வயிற்றில் அடித்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்தோம் என இந்திய மீனவர்கள் கூறுவது தவறு. இந்திய அரசு கடல் எல்லையில் நின்று அத்துமீறுபவர்களை தடுத்தால் இந்த பிரச்சினை ஏற்படாது.
தமிழ் நாடு மீனவர்கள் அயல் மாநிலங்களுக்கு சென்றால் இந்திய சட்டத்தின் கீழ் கைது செய்ப்படுவார்கள் என்ற அச்சத்தால் தொப்புள் கொடி உறவு என கூறி இங்கு அத்துமீறி வந்து தொழில் செய்கிறார்கள்.
சில நாட்களாக மயிலிட்டி பகுதியில் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
ஆகவே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம் – என்றனர்.-