உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா
சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது.
பருப்பு இறக்குமதி
உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்தியாவை வெளிநாட்டு கொள்முதல்களை அதிகரிக்க தூண்டியதாக கூறுகின்றனர். சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் சஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிப்புக்குள்ளானது.
இந்த நிலையில், கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அளவை குறைத்துக் கொண்டது. இந்தியா அல்லது கனேடிய நிர்வாகம் தங்கள் வர்த்தகத்தில் தடைகளை விதிக்கலாம் என்ற அச்சமே காரணமாக கூறப்பட்டது.
ஆனால் அந்த அச்சமும் நீடிக்கவில்லை. கனடாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி முந்தைய ஆண்டை விட 2023ல் 120 சதவிகிதம் அதிகரித்து 851,284 மெட்ரிக் டன்னாக இருந்தது என்று அரசு தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
சுமார் 3 மில்லியன் டன்
பருப்பு இறக்குமதிக்கு இந்தியா பெருமளவில் கனடாவையே நம்பியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பருப்பு இறக்குமதிக்கு வணிக நிறுவனங்கள் மாற்று வழியைத் தேடியதாக கூறப்படுகிறது.
2023ல் அதிக விளைச்சல் காரணமாக அவுஸ்திரேலியாவிலிருந்தும் பருப்பு இறக்குமதி மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவின் பருப்பு இறக்குமதி 2023ல் முந்தைய ஆண்டை விட 162 சதவிகிதம் அதிகரித்து, 1.68 மில்லியன் டன்களை எட்டியது.
இதன் மொத்த மதிப்பு 1.25 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் பருப்பு வகைகளின் தேவை சுமார் 3 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி என்பது வெறும் 1.3 மில்லியன் டன் அளவுக்கே இருப்பதாக கூறுகின்றனர்.