யுக்திய நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அதிரடித் தீர்ப்பு
யுக்திய நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க கடுவெல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று(21.02.2024)குறித்த தீர்ப்பை இரத்துச் செய்துள்ளது.
பணச்சலவை சட்டம்
கடந்த டிசம்பரில் கடுவெலயில் வசிக்கும் வெலிவிட்ட சுத்தா எனப்படும் மலலகே சுதத் கித்சிரி என்பவருக்கு சொந்தமானது எனும் சந்தேகத்தில், அவரது சகோதரிகளில் ஒருவரான எச்.எம். ஹீன்மெனிகே என்பவருக்குச் சொந்தமான ஐந்து சொகுசு பேருந்துகள், நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், கைப்பற்றியிருந்தனர்.
பணச்சலவை சட்டத்தின் கீழ் விசாரணைகளை நடத்த குறித்த வாகனங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
எனினும் வாகனங்களை தடுத்து வைத்திருக்க மேல்நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டிருக்காத காரணத்தினால், கடந்த 16ஆம் திகதி குறித்த வாகனங்களை விடுவித்து கடுவலை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.
மேன்முறையீடு தாக்கல்
கடந்த 16ஆம் திகதி கடுவெல நீதவான் சானிமா விஜே பண்டார வழங்கிய உத்தரவின் பிரகாரம் வாகனங்களின் உரிமையாளர்கள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வந்து 05 பேருந்துகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் சார்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைத்த வழிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கண்ட விசாரணைகளுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையானது விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்த உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கடந்த 16ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஹோமாகம இரத்து செய்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு மேற்குறித்த வாகனங்களை மீளக் கைப்பற்றுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர உத்தரவிட்டுள்ளார்.