டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு
டெல்லி எல்லையில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயி சுப்கரன்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் உறுதியளித்தார்.
வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், கடந்த 13ஆம் தேதி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்லும் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், நான்கு கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களுடன் எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்.
ஹரியானா – பஞ்சாப் எல்லையான ஷம்புவில் குவிந்த விவசாயிகளை துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதேபோன்று, பஞ்சாப் அருகே கானெரியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில், பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான சுபாகரன் என்ற விவசாயி தலையில் குண்டடி பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை மறுத்துள்ள போலீசார், விவசாயிகள் மிளகாய் பொடி தூவியதில், 10 காவலர்கள் காயம் அடைந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். டெல்லி சலோ போராட்டத்தில் ஏற்கனவே 2 விவசாயிகள் மாரடைப்பால் இறந்த நிலையில், போலீஸ் உடனான மோதலில் மேலும் ஒரு விவசாயி இறந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே பஞ்சாப் விவசாயி சுபாகரன் இறந்தது வருத்தமளிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, விவசாயியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாவும், சுப்கரன் சிங்கின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் புதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்துள்ளார். மேலும், சுப்கரண் பலிக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடன் பஞ்சாப் அரசு துணை நிற்கும். விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதால் பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. இனி ஒரு சுப்கரணை இறக்க விடமாட்டேன் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்சிங் மான் கூறியுள்ளார்.