;
Athirady Tamil News

செங்கடல் பதற்றத்திற்கு குரல் கொடுத்த சிறிலங்கா! ரணிலுக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிகாரி

0

லங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா, சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்படி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட சில முக்கிய தரப்பினரை இன்றைய தினம் சந்தித்து இலங்கையின் பொருளாதார அபிவிருத்து தொடர்பில் ரிச்சர்ட் வர்மா கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஆறு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பித்திருந்தார்.

இந்த இராஜதந்திர பயணத்தின் போது, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு

இதன்படி, ரிச்சர்ட் வர்மா தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து, குறித்த தரப்பினர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை இன்று முற்பகல் அதிபர் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நிலையை மேம்படுத்த தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இதன் போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் பாராட்டியுள்ளார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து இதன் போது ரணில் விக்ரமசிங்க, ரிச்சர்ட் வர்மாவுக்கு விளக்கியுள்ளார்.

உலக பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், செங்கடலில் இடம்பெறும் கடற்படை நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் சவூதி அரேபியாவின் நிலைத்தன்மைக்கு ஆதரவு தெரிவித்த சிறிலங்கா அதிபர், இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கடற்பயணம் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படுமெனவும் உறுதியளித்துள்ளார்.

கலந்துரையாடல்
இதேவேளை, ரிச்சர்ட் வர்மா தலைமையிலான தூதுக்குழுவினர், அலி சப்ரியுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக அமெரிக்கா வழங்கிய மனிதாபிமான மற்றும் அவசரகால உதவிகளுக்கு இதன் போது அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மேற்கு சர்வதேச முனைய தனியார் நிறுவனத்திற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் வழங்கிய 553 மில்லியன் அமெரிக்க டொலர் அபிவிருத்தி உதவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்க வழங்கிய ஆதரவுகளுக்கும் இந்த சந்திப்பின் போது, அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.