ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு
எதிர்வரும் ஜூலை மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை மற்றும் உள்ளக கருத்து கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18இற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் பதவிக் காலம்
இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்தினால் அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பப்படுகின்றது.
குறை நிரப்புப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிதியைப் பெறலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெற்று முதல் தடவையாக நாடாளுமன்றம் கூடி இரண்டரை வருடங்கள் சென்ற பின்னர் அதனை எந்நேரம் வேண்டுமானாலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
ஆனால், இடைக்கால ஜனாதிபதி அதாவது நாடாளுமன்றத்தின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனைக் கலைக்கும் அதிகாரம் உள்ளதா என்ற சட்ட ரீதியிலான சர்ச்சையையும் சிலர் கிளப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.