;
Athirady Tamil News

இலங்கையிலிருந்து ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் வெளியேற உத்தரவு., ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

0

போரினால் பாதிக்கப்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட விசா நீட்டிப்புகளை இலங்கை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் காரணமாக இலங்கையில் விசா நீட்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியானதால் பிப்ரவரி 23 முதல் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குடியேற்றக் கட்டுப்பாட்டாளர் சுற்றுலா அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், அமைச்சரவையின் தீர்மானம் எடுக்கப்படாமல், அவர்களை வெளியேறுமாறு கோருவதற்கான தீர்மானம் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட விசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டதால், ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் நீண்ட காலம் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

2022-இல் போர் வெடித்ததில் இருந்து கிட்டத்தட்ட 300,000 ரஷ்யர்களும் 20,000 உக்ரேனியர்களும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஆனால், நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது கிடைக்கவில்லை.

விமானப் பற்றாக்குறை காரணமாக அவர்கள் நீண்ட காலம் தங்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரஜைகள் சட்டவிரோத வணிகங்களை நடத்துவது, வெளிநாட்டினரை பணியமர்த்துவது மற்றும் உள்ளூர் அமைப்புகளைத் தவிர்த்து சேவைகளுக்கு பணம் செலுத்தும் முறைகளைப் பயன்படுத்துவது போன்ற புகார்கள் இருப்பதாக இலங்கை குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.