;
Athirady Tamil News

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் என்ன தண்டனை தெரியுமா?

0

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு என்று இந்திய மாநகரங்கள் ஒவ்வொன்றுமே போக்குவரத்து நெருக்கடிக்கு பெயர் பெற்றவை தான். இவை மட்டுமல்ல, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களும் கூட அப்படித்தான் இருக்கின்றன. பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை துளியளவும் மதிப்பது கிடையாது என்பதும் இதற்கு ஒரு காரணம். சாலைகளில் பல தடங்கள் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரே சமயத்தில் இரட்டை தடத்தில் பயணம் செய்வது, திடீரென்று முந்திச் செல்வது, இருவழிச் சாலையில் எதிரே வருகின்ற வாகனங்களை மறித்தபடி முன்னேறிச் செல்வது என்று விதி மீறல்களின் பட்டியல் ஏராளம். இதனால் தான் சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊர்திகளுக்கு கூட பல சந்தர்பங்களில் வழி கிடைக்காமல் போகிறது. சைரன் ஒலியை காதில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து வாகனத்தை இயக்குபவர்கள் ஏராளம்.

இதுபோன்ற விதி மீறல் நபர்களை கட்டுப்படுத்தவும், அவசர சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்திய நகரம் ஒன்றில் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகின்றது. சாலையோரங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து இந்தக் குற்றச் செயல்களை உறுதி செய்து, தொடர்புடைய வாகன ஓட்டிகளுக்கு அபராத சலான்களை வீட்டிற்கே அனுப்பி வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவசர வாகனங்கள் செல்வதற்கு என்றே பிரத்யேகமாக பசுமைவழித் தடங்கள் (அவசரப் பாதை) அமைக்கப்படுகின்றன என்றாலும், வழக்கமான சாலைகளில் வாகன ஓட்டிகள் அதற்கு வழிவிட வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பெரிய அளவுக்கான அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சம் தான் வாகன ஓட்டிகளை விழிப்புணர்வோடு இருக்கச் செய்யும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் அதிகரிக்கும் விதி மீறல்கள்

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகின்ற குற்றச் சம்பவம் நாட்டிலேயே மிக அதிகபட்சமாக டெல்லி மாநகரில் நடைபெறுகிறது. இது தொடர்பாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. இதில் 10 பேரில் 8 வாகன ஓட்டிகள் தாங்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். கார் ஓட்டுநர்கள், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் என யாருமே இதற்கு விதிவிலக்கு அல்ல. கடந்த 2022ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், “இந்தியாவில் அதிகமான உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக மது அருந்தி வாகனம் ஓட்டுவதை குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லியில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 20,776 பேர் ஆண்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 81.2 சதவீதம் பேர், தாங்கள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.