நீருக்குள் மூழ்கும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள்!
உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் என நாசா எச்சரித்துள்ளது.
இதன்படி, கடல் மட்ட உயர்வால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க் மற்றும் பால்டிமோர் உள்ளிட்ட சில இடங்கள் நீருக்குள் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வர்ஜீனியா டெக்கின் புவி கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆய்வகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டள்ளது.
ஆய்வு நடவடிக்கைகள்
கடற்கரைகளின் இயக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் குழு, செயற்கைக்கோள் தரவு மற்றும் ஜிபிஎஸ் சென்சார்களை ஆய்வு செய்துள்ளனர்.
இதையடுத்து, நோர்போக், பால்டிமோர், நியூயார்க் மற்றும் வர்ஜீனியா போன்ற முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு, கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கணிசமாக மூழ்கியுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர் வரையில் நிலம் மூழ்கியுள்ளது.
மூழ்கப்படும் நிலங்கள்
மேரிலாந்து, டெலாவேர், தென் கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் உள்ள சில மாவட்டங்களிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகத்தில் நிலம் மூழ்குவதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், சதுப்பு நிலங்களில் உள்ள நிலம் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மூழ்குகிறது.
காடுகளும் உப்பு நீர் ஊடுருவல் மற்றும் வடிகால் நிலம் ஆகியவற்றால் இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அபாயம்
இந்த நிலையில், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய ஏறக்குறைய 8 இலட்சத்து 97 ஆயிரம் கட்டமைப்புகள் கடல் நீரால் சூழப்படும் அபாயம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் வெள்ளம் மற்றும் பிற கடலோர ஆபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.