புதிய சாதனைக்காக சம்பந்தனிடம் ஆசி பெற்ற சிறுவன்
திருகோணமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் பாக்கு நீரிணையை கடக்கும் பயணத்தினை முன்னிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனை நேரில் சந்தித்து ஆசிகள் பெற்றுள்ளார்.
அனுமதி
இதன்போது இக்கட்டான சூழ்நிலைகளிலும் தனது பாக்கு நீரிணை பயணத்திற்காக பல அனுமதிகளுக்கு உதவி செய்தமைக்கு தனது மனமார்ந்த நன்றிகளை சிறுவன் தன்வந்த் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து உலகில் 06 ஆவது இடத்தினை பெறவேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என திருகோணமலை இந்து கல்லூரியில் கல்வி கற்கும் 13வயது மாணவன் ஹரிகரன் தன்வந்த் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நீந்திக் கடக்கும் தூரம்
இதேவேளை போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்கு நீரிணை நீந்திக் கடக்க போவதாக தன்வந்த் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இந்திய தனுஷ்கோடியில் இருந்து அதிகாலை 12.05 க்கு நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் டியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் நீந்திக் கடக்கும் தூரம் 31.5 Km என்பது குறிப்பிடத்தக்கது.