;
Athirady Tamil News

சாந்தனின் மரணம் ஒரு பாடம்! ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

0

தமிழக சிறையில் 32 ஆண்டு கால சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் முருகன் ஆகியோரை தங்கள் சொந்த நாட்டுக்கு அல்லது அயல் நாடுகளுக்கு அனுப்ப முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

தமிழக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் அண்மையில் உயிரிழந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழக சிறையில் 32 ஆண்டு கால நீண்ட சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி நினைவூட்டியுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாம்
இந்தியாவின் அயல் நாடான இலங்கைக்கு அனுப்பும் வரை குறித்த தரப்பினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தமை தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும் போது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று விடுதலை செய்யப்பட்ட நால்வரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சாந்தன் மரணம்
விடுதலையானதை தொடர்ந்து, குறித்த தரப்பினர் அவர்களை வெளிநாடுகளுக்கு நாடு கடத்துமாறு கோரியிருந்தாலும், இன்று வரை அவர்களது கோரிக்கைகளுக்கான பதில் கிடைக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, இனியாவது மீதமுள்ள மூவரினதும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்படி பழனிசாமி கோரியுள்ளார்.

கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயாஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு இந்திய வெளியுறவுத் துறையையும், தி.மு.க. அரசின் முதலமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.