சகோதரர்கள் சண்டைக்கு ரூ 20,000 கோடியை இழக்கும் இந்திய தொழிலதிபர்
இந்தியாவை சேர்ந்த 5 சகோதரர்கள் முன்னெடுத்த பல ஆயிரம் கோடிக்கான 21 ஆண்டு கால சட்டப் போராட்டம், இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது.
தொழில் ஒப்பந்தங்களை மீறியதாக
ஐந்து மாத காலம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில் ஹரேஷ் ஜோகானி என்பவர் தமது சகோதரர்களான ஷஷிகாந்த், ராஜேஷ், சேத்தன் மற்றும் ஷைலேஷ் ஜோகானி ஆகியோருக்கு இழப்பீடு மற்றும் சொத்துக்களில் பங்கு என ரூ 20,000 கோடிக்கு மேல் அளிக்க அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரேஷ் தமது சகோதரர்களுடனான நீண்டகால தொழில் ஒப்பந்தங்களை மீறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த விசாரணையை முன்னெடுத்துள்ளது.
2003ல் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் 18 முறை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன், பல முறை சட்டத்தரணிகள் மாற்றப்பட்டு, 5 நீதிபதிகளும் மாறினர். குஜராத்தை சேர்ந்த ஜோகானி குடும்பம் சர்வதேச அளவில் வைர விற்பனை சாம்ராஜியத்தை உருவாக்கினர்.
இவர்களின் நிறுவனங்கள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் அமைந்துள்ளது. கடந்த 1969ல் ஷஷிகாந்த் ஜோகானி என்பவர் தமது 22வது வயதில் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அங்கே அவர் தமக்கென சொந்தமாக வைர வணிகத்தை முன்னெடுத்துள்ளதுடன், சொத்துக்களையும் குவித்துள்ளார். ஆனால் 1990களில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது பெரும் இழப்பை அவர் எதிர்கொண்டுள்ளார்.
மட்டுமின்றி, 1994ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, இவரது ஒரு கட்டிடத்தில் இருந்து 16 பேர்கள் கொல்லப்பட்டனர். இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்ப, தமது சகோதரர்களை பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டார்.
2003ல் வழக்கு தொடுக்கப்பட்டது
இதன் பின்னர் அசுர வளர்ச்சி கண்டுள்ளது இவர்களின் கட்டுமான நிறுவனம். சுமார் 17,000 அபார்ட்மெண்ட் தொகுப்புகள் இவர்களுக்கு சொந்தமாக இருந்தது. ஆனால் ஹரேஷ் ஜோகானி என்பவர் ஒருகட்டத்தில் தமது சகோதரர்கள் அனைவரையும் வெளியேற்றி தாமே முன்னெடுத்து நடத்த முடிவு செய்ததுடன், சகோதரர்களுக்கான பங்கையும் அளிக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து சகோதரர்கள் தரப்பில் 2003ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், சகோதரர்கள் சேத்தன் மற்றும் ராஜேஷ் ஆகியோரிடம் ஏற்படுத்திக்கொண்ட வைரத்தொழில் ஒப்பந்தத்தை மீறியதாக குறிப்பிட்டு அவர்கள் இருவருக்கும் 165 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஹரேஷுக்கு நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.
கட்டுமானத் தொழில் ஒப்பந்தத்தை மீறதற்காக ஷஷி என்பவருக்கு 1.8 பில்லியன் டொலரும், சேத்தனுக்கு 234 மில்லியன் டொலரும், ராஜேஷுக்கு 460 மில்லியன் டொலரும் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.