வடக்கில் தடைப்பட்டுள்ள ஆசிரிய இடமாற்றம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்த இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்தியான சேவைக்காலங்களைப் பூரணப்படுத்தி, முறையாக விண்ணப்பித்து, அதனை கல்வி வலயங்களும் மாகாணமும், ஆசிரிய இடமாற்ற சபைகளும் அங்கீகரித்ததன் பின்னர் இடமாற்றம் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வெளிப்படுத்த வேண்டும்.
என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளர் சி.கணேசலிங்கம் கையொப்பமிட்டு கல்விச் செயலாளரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில்,வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக தாங்கள் பொறுப்பேற்றதன் பின்னர் நிறைய மாற்றங்களை நாம் காண்கின்றோம். அரசியல் ரீதியாகவும் வேறும் பல இடர்ப்பாடுகளாலும் வடமாகாணத்தின் கல்வியில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டதனை, அதனூடான வடபுலத்துக் கல்வியை சிலர் சீரமிக்க முனைந்ததைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இப்பொழுதும் அத்தீய சக்திகள் முனைவதனை நாம் அவதானிக்கும் அதேவேளை அதற்கு உயர் அதிகாரிகள் குறுகிய நோக்கத்தோடு தொழிற்படுவதனை ஏற்க முடியாது.
வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம் என்பது இன்னும் ஆசிரியர்களை உளரீதியாக வதைத்து அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைத் தடுத்து அதன்மூலம் மாணவர் கல்வியை அழிக்க நாம் இடமளிக்க முடியாது.
2024 ஆண்டு வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தாபனவிதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளின்பால் இடமாற்றம் வழங்கப்படுவது சட்டரீதியானது. அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
இங்கே வடக்கு மாகாண ஆளுநரின் அண்மித்த கூற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். “அரச அதிகாரிகள் எஜமானர்கள் அல்ல” இக்கூற்றிற்கு அமைவாக. தாமதப்படுத்துவதும். அதிகாரத் துஸ்பிரயோகம் செய்வதும் காலம் காலமாக நடைபெறுவதனை இனியும் ஏற்க முடியாதுள்ளது.
அண்மையில் நாம் தங்களைச் சந்தித்து வடபுலத்துக் கல்வியின் மீளெழுச்சி தொடர்பான பல விடயங்களை எடுத்துரைத்தோம்.
சுற்றறிக்கைகளும் தாபனவிதிக்கோவையும் மேல் நிலை அதிகாரிகளில் இருந்து அனைவருக்கும் பொதுவானவை. அவற்றைமீறும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
ஆசிரிய இடமாற்றம் என்பது ஆசிரியர்களுக்காக மட்டுமன்றி விசேடமாக மாணவர்களின் நலனுக்காகவே. இதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தொடக்க காலத்தில் இருந்து மனதில் இருத்தித் தொழிற்படுவதனை தாங்கள் அறியாதவரல்ல. ஆசிரியர்களை நோகடித்து அவர்களிடம் சேவையைப் பெறுவது அடிமுட்டாள்தனமானது. ஆசிரியத் தொழில் அறிவு,திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்துத் தொழிற்படவேண்டியது.
ஆசிரியர்கள் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் இடமாற்றத்தின் மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஆசிரியர்களைச் சமப்படுத்துவதும். தேடுவதும் திணைக்களத்தின் கடமை. அக்கடமைகளைச் செய்ய பலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றை விடுத்து. விண்ணப்பித்த ஆசிரியர்களை விடுவிக்கும் காலம்வரை இழுத்தடித்து அவர்களுக்குப் பதிலீடாக பிழையான தரவுகளோடு ஆசிரியர்களைத் தேடியலைவது நிர்வாகச் செயற்பாட்டிற்கு முரணானது. ஒரு பாடசாலையின் நலன். அதன் பின்னணி. அங்கு கற்கும் மாணவர்களின் குடும்பப் பின்னணி என்பவற்றைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு பாடசாலையில் இருந்து மூன்றில் இரண்டு பகுதி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது யாருக்காக?
ஏனைய துறைசார் அமைச்சுக்கள். திணைக்களங்களில் அவ்வாறு நடைபெறுவதில்லை.ஆகையால் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் இடமாற்றம் வழங்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர்களாகவே ஒரு முடிவினை எடுப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். வலயங்களால் பாடசாலைகளால் விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பாட நேரசூசிகைகள் வழங்கப்படவில்லை. இதன்மூலம் அரச நிதி வீண்விரயம் செய்யப்படுவதற்கு யார் வகை சொல்வது.?தாமதமின்றி இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது.