மாலைதீவை இலவச வலைக்குள் வீழ்த்தும் சீனா
இந்திய வீரர்களை வெளியேற்றுவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவிடம் இருந்து இலவசமாக இராணுவ உதவிகளை பெறும் வகையில் நேற்றுமுன் தினம் (4) இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் இராணுவ உதவியை இலவசமாக வழங்குவது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில், மாலைதீவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது காசன் மவுமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜாங் பாவ்கன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாக மாலைதீவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
எனினும் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்திய இராணுவ வீரர்கள் வெளியேற்றம்
மாலைதீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார்.
அவரை பிஎன்பி கட்சியை சேர்ந்த முகமது முய்ஸு வீழ்த்தி வெற்றி பெற்று அதிபரானார். இந்த முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டதோடு சீனா ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.
இவர் தனது தேர்தல் பிரசாரத்திலேயே தான் வென்றால் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுவேன் என்று கூறி பிரசாரம் செய்து வாகை சூடினார். அதேபோல் வெற்றி பெற்ற அவர் அங்குள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறினார்.இது விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்தியாவுடன் முறுகல்
இந்தியாவுடன் முறுகலில் உள்ள முய்சு சீனாவுடன் அதிகம் நெருக்கம் காட்டுவதோடு சீனாவுடனான உறவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
முய்சு பதவியேற்றபின் நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு, ஒரு விமான தளத்தில் இருந்து இந்திய வீரர்கள் 2024 மார்ச் 10-ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் 2024 மே 10-ஆம் திகதிக்குள் அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இந்திய இராணுவத்தின் முதல் குழுவை வெளியேற்றுவதற்கான கெடு இன்னும் ஐந்து நாட்களில் முடிய உள்ள நிலையில், அந்த வீரர்களுக்கு பதிலாக பணியாற்றக்கூடிய இந்திய தொழில்நுட்ப குழு மாலைதீவு வந்துள்ளது.
இராணுவ உதவி பெறும் மாலைதீவு
அவர்கள் விமான தளத்தின் பொறுப்பை ஏற்றதும் அந்த தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் நாடு செல்லவுள்ளனர். இந்நிலையில் தான் நேற்றையதினம் சீனாவிடம் இருந்து இலவசமாக இராணுவ உதவிகளை பெறும் வகையில் நேற்று இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத 12 நோயாளர் காவு வண்டிகளை சீன அரசாங்கம் மாலைதீக்கு பரிசாக வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.