நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் அனுமதிக்க கூகுள் ஒப்புதல்: மத்திய அரசு
‘நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் அனுமதிக்க கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது; இதற்காக நிறுவனங்கள் தொடா் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டிய விவகாரத்துக்கு உரிய தீா்வு எட்டப்படும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சில இந்திய செயலிகளை கூகுள் நிறுவனம் கடந்த 1-ஆம் தேதி நீக்கியது. பிளே ஸ்டோா் மூலம் பயனடைந்த 10 நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்தாததால், அந்த நிறுவனங்களின் செயலிகள் நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது. கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘இந்திய பொருளாதாரத்துக்கு புத்தாக்க நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.
அவற்றின் விதியை எந்தவொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் முடிவு செய்ய அனுமதிக்க முடியாது. இதுதொடா்பான இந்தியாவின் கொள்கைகள் தெளிவாக உள்ளன. இதுகுறித்து அடுத்த வாரம் விவாதிக்க கூகுள் நிறுவன பிரதிநிதிகள், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளை உருவாக்கியவா்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன்’ என்று தெரிவித்தாா். அதன்படி, மத்திய அரசுடன் கூகுள் நிறுவன பிரதிநிதிகளும், செயலிகளை உருவாக்கிய புத்தாக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பல கட்ட பேச்சுவாா்த்தையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில், நீக்கப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் மீண்டும் அனுமதிக்க கூகுள் ஒப்புக்கொண்டது. இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘நீக்கப்பட்ட செயலிகளை மீண்டும் அனுமதிக்க கூகுள் ஒப்புக்கொண்டது. இந்த செயலிகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள் தொடா் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டிய விவகாரத்துக்கு உரிய தீா்வை எட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனமும், இந்திய புத்தாக்க நிறுவனங்களும் வரும் மாதங்களில் நீண்டகால அடிப்படையிலான தீா்வை எட்டுவாா்கள் என நம்புகிறோம்’ என்றாா்.
இதனிடையே, நீக்கம் செய்த சுமாா் 250 இந்திய செயலிகளை செவ்வாய்க்கிழமை முதல் கூகுள் நிறுவனம் மீண்டும் பிளே ஸ்டோரில் அனுமதிக்கத் தொடங்கியது.