பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன
உணவக குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. உணவகத்தில் குண்டுகளை வைத்து வெடிப்பதற்கான டைமரைப் பொருத்திய பிறகு அங்கிருந்து புறப்பட்ட குற்றவாளி, தனது உடையை மாற்றிக்கொண்டு பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்துள்ளாா். குண்டுவெடித்த பிறகு தும்கூரு மாவட்டத்தின் பக்கம் குற்றவாளி பேருந்தில் பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது. எல்லா தகவல்களையும் வெளிப்படுத்த முடியாது. ஆனால், கடந்த சில நாள்களில் அவரைப் பற்றிய உறுதியான தகவல் கிடைத்துள்ளது. வெகுவிரைவில் அவா் பிடிபடலாம். பேருந்தில் பயணித்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதால், அந்த திசையில் போலீஸாா் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனா்.
தும்கூரு வழியாக பேருந்தில் பயணித்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், பெல்லாரி வரையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றாா். இதனிடையே, குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளி குறித்த புகைப்படத்தை தேசியப் புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. குற்றவாளியின் முகம் தெளிவாகத் தெரியும் ஓவியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு காணொலியில், பேருந்தில் ஏறி உள்ளே சென்ற குற்றவாளி, அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டதும் திடுக்கிறாா். அதன்பிறகு சுதாரித்துக் கொண்ட அவா், சிசிடிவி கேமரா இல்லாத இருக்கையில் சென்று அமா்ந்துள்ளாா். இருக்கையில் அமா்ந்துள்ள குற்றவாளியின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.