பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும் ‘மை சேப்டிபின்’ செயலி: மாநகராட்சி ஒப்பந்தம்
சென்னையில் பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும் வகையில் சென்னை மாநகராட்சியுடன் ‘மை சேப்டிபின்’ செயலி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தீா்வு காணும் வகையிலும், பெண்களுக்கு பாதுகாப்பான பகுதிகள் குறித்து தெரிவிக்கும் வகையிலும் ‘மை சேப்டிபின்’ செயலி 2013-இல் தொடங்கப்பட்டது. இந்த செயலி மூலம் ஒரு பகுதி எந்த அளவுக்கு பாதுகாப்பானது எனவும், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதுகாப்பற்ற பகுதிகளையும் அறிய முடியும். மேலும், ஒரு இடத்துக்கு செல்லும் முன்பே செல்லும் பாதை பாதுகாப்பானதா எனவும் அறிந்து கொள்ள முடியும். சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியுடன் ‘மை சேப்டிபின்’ செயலி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. மாநகராட்சி, காவல்துறை சாா்பில் பெண்களின் பாதுகாப்புக்காக உதவி எண்கள் உள்ளன. அந்த வகையில் ‘மை சேப்டிபின்’ செயலி, ‘பிரஜனா எனும் இரு நிறுவனங்கள் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த செயலி மூலம் நகரின் பாதுகாப்பான பகுதிகள், அருகில் உள்ள பாதுகாப்பான இடங்கள் குறித்த தகவல் அறிந்து கொள்ளமுடியும் என்றாா் அவா்.