குண்டுவெடிப்பு நடந்த பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே 8 நாட்களுக்குப் பிறகு இன்று திறப்பு
குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை(மார்ச்.9) திறக்கப்பட்டது. உணவத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் உணவகத்தில் மாா்ச் 1 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். இந்த விவகாரத்தை கா்நாடக காவல் துறையின் மாநகரக் குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவா் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.
அந்த மா்ம நபா் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், முகமூடி, தொப்பி அணிந்திருந்தாா். எனினும், கணினி மூலமாக மா்ம நபரின் முகத்தைக் கண்டறிந்துள்ள என்ஐஏ அதிகாரிகள், அவரது புகைப்படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனா். மேலும், அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனா்.
இந்த நிலையில் குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பட்டிற்காக சனிக்கிழமை(மார்ச்.9) திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
வாடிக்கையாளர்கள் கடைக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களிடம் முறையான சோதனை நடத்தப்பட்ட பின்னரே உணவகத்துக்கு உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
உணவகத்தை திறப்பதற்கு முன், அதன் இணை நிறுவனர் ராகவேந்திர ராவ் மற்றும் அனைத்து ஊழியர்களும் ஒன்றாக நின்றதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பணிகள் தொடங்கப்பட்டன.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக உணவகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகவேந்திர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற சம்பவங்கள் “வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். பாதுகாப்புக் குழுவை நாங்கள் பலப்படுத்தி உள்ளோம். மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு எங்கள் பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்க அமைக்க முயற்சித்து வருகிறோம்,” என்று ராகவேந்திர ராவ் கூறினார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, ராகவேந்திர ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை உணவகத்தை மீண்டும் திறக்க உள்ளோம். காலை 6.30 மணிக்கு தேசிய கீதம் இசைக்கட்டு உணவகம் திறக்கப்படும். இது எங்கள் தாரக மந்திரம். “அனைத்து சிசிடிவி காட்சிகளையும், தகவல்களையும் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இவ்வளவு விரைவாக உணவகத்தை மீண்டும் திறக்க உதவிய அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்”.
“என்ஐஏ விரைவில் குற்றவாளியை நம் முன் கொண்டுவந்து நிறுத்தும். உணவகம் மீண்டும் திறப்பதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். மேலும் சிசிடிவிகளை எங்கு பொருத்துவது என்பது குறித்து அரசும் காவல்துறையும் எங்களுக்கு வழிகாட்டியுள்ளது. வளாகத்தை கண்காணிப்பதற்காக ஒருவரை நியமிக்க உள்ளோம்,” என்று அவர் கூறினார்.