சிறார் ஆபாச படம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகள் நடித்த ஆபாச படத்தை பார்த்ததாக காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக் கோரி இளைஞர் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகள் நடித்த ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும், மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம் எனத் தெரிவித்து காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்ற கொடூரமான கருத்தை கூற முடியும்” என்று கண்டனத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்தை 3 வாரத்துக்குள் திரும்பப் பெற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.