அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்க கேஜரிவால் தயாரா? உச்சநீதிமன்றம் கேள்வி
பாஜக குறித்து தவறான காணொலியை பரப்பிய வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்க தயாரா? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐடி) குறித்து யூடியூபில் வெளியிடப்பட்ட காணொலியை அரவிந்த் கேஜரிவால் மறுபதிவு செய்ததாக அவா் மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அவரை குற்றவியல் அவமதிப்பின்கீழ் குற்றவாளியாக அறிவித்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் மேல்முறையீடு செய்தாா்.
பாஜக ஐடி பிரிவு குறித்த காணொலியை தெரியாமல் எக்ஸ் வலைதளத்தில் மறுபதிவு செய்துவிட்டதாக அவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா தலைமையிலான அமா்வின் முன்பு திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது எக்ஸ் வலைதளத்திலோ அல்லது இன்ஸ்டாகிராம் செயலி மூலமாகவோ கேஜரிவால் மன்னிப்புக் கோர வேண்டும் என மனுதாரா் விகாஸ் சங்கிரித்யாயன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனா். இதையடுத்து, ‘ எந்த வடிவத்தில் மன்னிப்புக் கோர வேண்டுமென கேஜரிவாலுக்கு மனுதாரா் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
மேலும், ‘நீங்கள் மன்னிப்புக் கேட்க தயாராக இருந்தால் உங்களது உரிமைகள் பாதிக்கப்படாதவாறு பகிரலாம். இல்லையெனில் மறுபதிவு செய்வது குற்றமா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொள்ள நேரிடும்’ என கேஜரிவால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் நீதிபதிகள் தெரிவித்தனா். இந்த அறிவுறுத்தல்களை எடுத்துக்கொள்ள கால அவகாசம் தேவைப்படுவதாக கேஜரிவால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்தாா். இதையடுத்து, கேஜரிவால் மன்னிப்புக் கேட்டுவிட்டால் எவ்வித பிரச்னையும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா். அதுவரையில் கீழமை நீதிமன்றங்களில் இந்த வழக்குத் தொடா்பாக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிட்டனா்.