தொடரும் வெப்பமான காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களிடம் கோரியுள்ளது.
வறட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால் நேர அட்டவணைப்படி நீரை விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி எச்சரித்துள்ளது.
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்திற்கு தற்போது தடைகள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
நீர் பற்றாக்குறை
தற்போது நாட்டின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், 1939 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக நீர் விநியோகத் தடைகள் தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியுமென அனோஜா களுஆராச்சி கூறியுள்ளார்.
மேலும், இந்த தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.