பச்சிளம் குழந்தை நரபலி.. மாந்திரீகத்தால் அழிந்த குடும்பம்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியாறு அடுத்த கக்காட்டுகடை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது நண்பர் நிதிஷ். இவர்கள் இருவரும் அப்பகுதியில் ஒர்க்ஷாப் ஒன்றில் திருடிய போது சிக்கிக் கொண்டனர். இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது போலீசாரே திணறிப் போகும் அளவுக்கு நரபலி கொலை சம்வங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை கொலை செய்து சொந்த வீட்டில் புதைத்த சம்பவத்தை பற்றி அவர்கள் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ந்து போயினர். அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலமானது.
பூஜை, மாந்திரீகம் என அமானுஷ்ய வேலைகளில் ஈடுபட்டு வந்த நிதிஷுக்கு, விஷ்ணுவின் நட்பு கிடைத்துள்ளது. விஷ்ணுவின் சகோதரிக்கு கையில் ஏற்பட்ட பிரச்னையை பூஜையில் சரி செய்து தருவதாகக் கூறி, அவரது குடும்பத்தாருடன் நிதிஷ் நெருங்கி பழக ஆரம்பித்தார். நாளடைவில் விஷ்ணு குடும்பத்தினர் நிதிஷ் கட்டுப்பாட்டில் வந்தனர். விஷ்ணு சகோதரியுடன் நிதிஷூக்கு ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தில், 2016ல் ஆண் குழந்தை பிறந்தது. வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என கருதிய நிதிஷ் குழந்தையை நரபலி கொடுத்து விடலாம் எனக் கூறி விஷ்ணுவின் குடும்பத்தாரை மூளைச் சலவை செய்துள்ளார். அவ்வாறு நரபலி கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்றும், நகை, பணம் என ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.
இதையடுத்து, நிதிஷ், விஷ்ணு, அவரது தந்தை விஜயன் ஆகியோர் சேர்ந்து பிஞ்சு குழந்தையை மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளனர். இதற்கு விஷ்ணுவின் தாயும், சகோதரியும் உடந்தை என்பதும் தெரியவந்தது. உடலை வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் குழி தோண்டி புதைத்தனர். இச்சம்பவத்திற்க்கு பிறகு குடியிருந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு விஷ்ணுவின். குடும்பத்தினர். வேறொரு வீட்டிற்கு குடியேறியுள்ளனர். இந்நிலையில், விஷ்ணுவின் தந்தை விஜயனுடன் ஏற்பட்ட தகராறில், நிதிஷ் சுத்தியலால் அவரை அடித்து கொலை செய்துள்ளார். அவரது உடலை விஷ்ணு, அவரது தாய் சுமா உதவியுடன் கக்காட்டுகடை வாடகை வீட்டில் நிதிஷ் புதைத்ததும் விசாரணையில் அம்பலமானது. நிதிஷ் குறிப்பிட்ட வாடகை வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு தோண்டி பார்த்த போது, விஜயனின் உடல் மூன்றாக மடித்து அட்டை பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளை சேகரித்து கோட்டயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குழந்தையின் உடல் புதைக்கபட்ட வீட்டின் மாட்டுத்தொழுவம் அருகே உடலை தோண்டி எடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. நிதிஷ், விஷ்ணு, அவரது தாய் சுமா மற்றும் சகோதரி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.