ஏழை பெண்களுக்கு ரூ.1 லட்சம்; அரசு வேலைகளில் 50% ஒதுக்கீடு – வாரி வழங்கும் ராகுல் காந்தி!
பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி, அரசு வேலைகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
ராகுல் காந்தி
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அரசியல் காட்சிகள் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு அங்கமாக மஹாராஷ்டிராவில் உள்ள துலே பகுதியில் நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பின் பெண்களுக்கான ஐந்து வாக்குறுதிகளை வழங்கினார்.
வாக்குறுதி
பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
இந்த தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவு திட்ட பெண் ஊழியர்களுக்காக மத்திய பட்ஜெட்டில் நிதி இரு மடங்காக உயர்த்தப்படும்.
பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து வழிகாட்டுவதற்கு ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.