பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான புதிய செயல்திட்டத்தின் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கனேடிய உலக பல்கலைக்கழக சேவை (WUSC)அமைப்பானது GRIT எனும் புதிய செயல்திட்டத்தை ( Growth, Resilience, Investment and training ) வளர்ச்சி, மீண்டெழும்தன்மை, முதலீடு மற்றும் பயிற்சி ஆகிவற்றை நோக்கமாக கொண்டு ஆரம்பித்துள்ளது. GRIT செயல்திட்டமானது வட மாகாணத்திலுள்ள பெண் தொழில்முனைவோருக்கான, பால்நிலை பொறுப்புணர்வுமிக்க ஒரு சூழல் கட்டமைப்பினை நிறுவுவதனை இலக்காக கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கான அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், பெண் தொழில் முனைவோருக்கான வசதிகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பில் உரையாற்றினார்.
வடக்கு மாகாணத்தில் பெண் தொழில் முனைவோருக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.
பயிற்சிகளை உரியவாறு பெற்றுக்கொள்ளும் தொழில் முனைவோரை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டும் என ஆளுநர் கூறினார். இவ்வாறு சமூகமயமாகும் போது பெற்றுக்கொண்ட பயிற்சிகளை வடக்கு மாகாணத்துக்குள்ளே செயற்பாட்டு ரீதியாக முழுமையாக பயன்படுத்த முடியும் என ஆளுநர் தெரிவித்தார். அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கக்கூடிய புதிய செயல் திட்டமானது அனைத்து பெண் தொழில்முனைவோருக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.