சிஏஏ சட்டம்: எங்கள் விருப்பம் இதுதான் – இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!
மதவேறுபாடு இன்றி குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ம் தேதி நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டம், 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோர் குடியுரிமை பெற வழிவகை செய்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் மதவேறுபாடு இன்றி குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது.
தாலிபான் அறிவுறுத்தல்
இது தொடர்பாக தாலிபான் அரசின் (ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன் கூறியதாவது “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.