;
Athirady Tamil News

கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்ததில் 2 பேர் பலி

0

கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள்.

மேற்கு வங்க மாநிலம், கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 2 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் இதுவரை சுமார் 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து பகுதியில முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். விபத்து நடந்த உடனேயே மீட்புப் பணி தொடங்கியது.

இரண்டு பேர் பலியாகியுள்ளனர், 5-6 பேர் இன்னும் உள்ளே சிக்கியுள்ளனர், அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள். மருத்துவம், தீயணைப்பு மற்றும் பிற துறைகளின் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக கட்டடம் கட்டப்பட்டு வந்துள்ளது. கட்டடம் கட்டுவதற்கு அரசு நிர்வாகம் அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கவில்லை.

விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டும் பணியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உதவி செய்யும். அருகில் உள்ளவர்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளன, அந்த மக்களுக்கும் அரசு உதவி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டடம் இடிந்து விழும் போது பலத்த சத்தம் கேட்டதுடன், அடர்ந்த தூசி மேகம் சூழ்ந்தது. கட்டடத்தில் யாரும் வசிக்கவில்லை என்றாலும், அது அருகில் உள்ள குடிசைகளில் இடிந்து விழுந்தது. இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சுகிறோம் என உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.