;
Athirady Tamil News

மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம்

0

மாலைதீவின் எல்லையைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம், நாட்டின் எல்லைகளை கண்காணிக்க துருக்கியிடமிருந்து 3 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) மாலைதீவு வாங்கியுள்ளதாக அந்நாட்டு அதிபா் முகமது முய்சு தெரிவித்துள்ளாா்.

இந்த ஆளில்லா விமானங்களை மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாலைதீவின் அதிபா் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாலைதீவு சிறிய நாடல்ல, ஒன்பது லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்த எல்லையைக் கண்காணிக்கும் திறன் மாலைதீவு பாதுகாப்புப் படைகளுக்கு உள்ளது.”என்றார்.

மாலைதீவின் பாதுகாப்புப் படை
சுதந்திரமான, இறையாண்மை மிக்க மாலைதீவின் எல்லைகளைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம், நாட்டின் கடலோரக் காவல் படையின் திறன் இரு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தவிரவும், மாலைதீவின் விமானப் படையை விரிவுபடுத்தவும், ராணுவ வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியிருந்தார்.

அதன்படி, பிற நாடுகளுடனான உறவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மாலைதீவின் பாதுகாப்புப் படைகளைத் தரம் உயா்த்த துருக்கி அதிபா் எா்டோகன் மேற்கொண்டு வரும் தொடா் முயற்சிகளுக்கு நன்றிகளையும் அவர் கூறியிருந்தார்.

பாதுகாப்பு உறவு
மூன்று ஆளில்லா விமானங்கள் துருக்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளன, இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய உறவின் மூலம் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றாா்.

இந்நிலையில், இந்தியாவிடமிருந்து இரண்டு ஹெலிகொப்டா்கள், டாா்னியா் ரக விமானம் மாலைதீவுக்கு பரிசாக வழங்கப்பட்டது, அவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெறுமாறு கடந்த ஆண்டின் இறுதியில் அதிபராகப் பதவியேற்ற முகமது முய்சு அதிரடியாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்திய வீரா்களின் முதலாவது குழு மாலைதீவிலிருந்து நாடு திரும்பியுள்ளது, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் அதிபா் முகமது முய்சு, சீனா மற்றும் துருக்கியுடன் இணைந்து மாலைதீவுடனான பாதுகாப்பு உறவைப் பலப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.