பாஜக கூட்டணியின் மாநாடாக மாறிய சேலம் பொதுக்கூட்டம்: பிரதமருடன் கரம் கோத்த தலைவர்கள்
சேலம், மார்ச் 19: சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மாநாடுபோல அமைந்தது.
சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசியது வருமாறு:
கே.அண்ணாமலை: தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக மோடி ஆட்சியில் அமருவார். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும்; விவசாயிகள், மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட முடியும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பது உறுதி. அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. நாட்டின் நலன் கருதியும், தமிழகத்தின் நலன் கருதியும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சி புரிந்து வருகின்றன. மக்கள் அனைவரும் மாற்றம் வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். அந்த ஏக்கத்தைப் போக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளது.
டி.டி.வி.தினகரன்: பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராவார். அதற்காக தமிழகத்தில் அமமுக கடினமாக உழைக்கும். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற, நாம் அனைவரும் இணைந்து ஒரு மாதம் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்: மத்தியில் சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வருபவர் பிரதமர் மோடி. மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி வழங்கியவர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிட்டது. ஆனால், தன்னுடைய ஆட்சிக் காலத்தில், ஒரே அரசாணையில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வழங்கினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்.
நடிகர் சரத்குமார்: எதிர்க்கட்சிக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியவில்லை. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியைக் குறைகூற ஒன்றுமே இல்லை. ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. திமுகவினர் தமிழக மக்களின் மனதில் தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, விஷ விதையை விதைத்து வருகிறார்கள்.
பாரிவேந்தர்: கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால், உலகப் பொருளாதாரத்தில் 10}ஆவது இடத்தில் இருந்த இந்தியா 5}ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நமக்கு திட்டங்கள் வரவிடாமல் தடுத்தது திமுக எம்.பி.க்கள் தான். இந்நிலை மாற வேண்டும்.
ஏ.சி. சண்முகம்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என கேள்வி கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ரூ. 900 கோடி மானியமாக கொடுத்து இருக்கிறார். ரூ. 72,000 கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுத்திருக்கிறார். எனவே, மீண்டும் நல்லாட்சி மலர பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
பங்கேற்ற தலைவர்கள்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன், பாமக நிறுவனர் ராமதாஸ், கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரவேற்பு: முன்னதாக, மதியம் 12.50 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்ட இடத்துக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். பின்னர் திறந்தவெளி வாகனம் மூலம் பொதுக்கூட்ட வளாகத்தில் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி வந்தார். அவர் மீது மலர்கள் தூவி கட்சியினர் வரவேற்றனர். அதன்பிறகு, ஒரு மணியளவில் மேடைக்கு வந்த பிரதமர், கூட்டணி கட்சித் தலைவர் ஒவ்வொருவரிடத்திலும் தனித்தனியே கைகுலுக்கி நலம் விசாரித்தார். பாமக தலைவர்கள் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர்.
நினைவுப் பரிசுகள்: சேலம் மாவட்ட பாஜக சார்பில், சேலத்துக்குப் பெருமை சேர்க்கும் வெள்ளிக் கலசமும் ஜவ்வரிசியும், நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிலையும், கரூர் மாவட்ட பாஜக சார்பில் பெட்ஷீட்டும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டன.
பகல் 1.15 மணிக்கு மேடையில் உரையாற்றத் தொடங்கிய பிரதமர் மோடி, தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பேசினார். இந்தப் பேச்சின்போது, பாரத அன்னை வாழ்க, சேலம் கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமி, தமிழ் சகோதர, சகோதரிகளே என தமிழில் பேசினார்.
பொதுக்கூட்ட மேடையில் பிற்பகல் 2.20 மணிக்கு தனது உரையை நிறைவு செய்த பிரதமர் மோடி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு, 2.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மோர், குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுக்கூட்ட அரங்குக்குச் சென்றவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
ஆடிட்டர் ரமேஷை நினைவுகூர்ந்த பிரதமர்!
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ். சமூக விரோதிகளால் 2013}ஆம் ஆண்டு அவர் கொலை செய்யப்பட்டார். அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தனது பேச்சின் இடையே பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தனது பேச்சினிடையே சேலத்துடனான தனது உறவு குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: நான் பலமுறை சேலத்துக்கு வந்துள்ளேன். இம்முறை வந்தபோது, எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது, சேலத்தில் இருந்து ரத்தினவேல் என்ற இளைஞர் வந்திருந்தார். சேலத்தின் பெருமைகளை அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பிறகு சேலம் மீதான ஈர்ப்பு எனக்கு அதிகரித்தது. சேலத்தில் உணவகம் நடத்தி வந்த அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
அதே போல, சேலம் தந்த முக்கியமான தலைவர் கே.என்.லட்சுமணன். அவர் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தார்; நெருக்கடிநிலை காலத்தில் துணிச்சலுடன் கட்சியை நடத்தினார்.
ஆடிட்டர் ரமேஷும் அதே ஆர்வத்துடன் களப் பணியாற்றி வந்தார். (அப்போது கண்கலங்கிய பிரதமர் மோடி, சில நிமிஷங்கள் பேச்சை நிறுத்தி, தண்ணீர் குடித்துவிட்டு பிறகு தனது பேச்சைத் தொடர்ந்தார்). ஆடிட்டர் ரமேஷ் கட்சிக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்தவர்.
கட்சிக்காக உழைத்த நேர்மையாளரை சமூக விரோதிகள் கொலை செய்துவிட்டனர் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.