;
Athirady Tamil News

அதிமுக: 16 தொகுதிகளின் வேட்பாளர்கள்

0

மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, குடியரசுக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அறிவித்தார்.

பின்னர், அதிமுக போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். முதல் பட்டியலில் 2 பேர் மருத்துவர்களாகவும், 4 பேர் வழக்குரைஞர்களாகவும், 2 பேர் பொறியாளர்களாகவும், 4 பேர் முதுநிலை பட்டதாரியாகவும், ஒருவர் இளநிலை பட்டதாரியாகவும் உள்ளனர். ஒருவர் பட்டயப் படிப்பு படித்துள்ளார்.

புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு: 16 வேட்பாளர்களில் 15 வேட்பாளர்கள் வரை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்டச் செயலர் என்கிற நிலையில் அல்லாமல் ஒன்றியச் செயலர் அளவிலும், அதிமுகவின் சார்பு அணிகளைச் சேர்ந்தோருக்கும் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர். ஜெ.ஜெயவர்தனுக்கு மீண்டும் தென்சென்னையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ராயபுரம் ஆர்.மனோவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்று, அங்கிருந்து அதிமுகவுக்கு வந்த டாக்டர் பி.சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல பாஜகவின் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சரஸ்வதியின் மருமகனும், பாஜகவில் இருந்து வந்தவருமான ஆற்றல் அசோக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண் வேட்பாளர்கள் இல்லை: முதல் பட்டியலில் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரண்டாவது பட்டியலில் பெண் வேட்பாளர்கள் இடம்பெறுவர் என அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

33 தொகுதிகளில் போட்டி: அதிமுக சார்பில் முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. எனினும், வேறு கட்சி கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு ஒதுக்கவும் அதிமுக தயாராக உள்ளது.

தற்போதைய நிலையில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட உள்ளது. இரண்டாவது வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (மார்ச் 21) வெளியிட உள்ளார். வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருச்சியில் மார்ச் 24-இல் நடைபெற உள்ளது.

வேட்பாளர் பட்டியல்

1. வடசென்னை – இரா.மனோகர் (எ) ராயபுரம் ஆர்.மனோ

2. தென்சென்னை –

டாக்டர். ஜெ.ஜெயவர்தன்

3. காஞ்சிபுரம் (தனி) – இ.ராஜசேகர்

4. அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்

5. கிருஷ்ணகிரி – வி.ஜெயபிரகாஷ்

6. ஆரணி – ஜி.வி.கஜேந்திரன்

7. விழுப்புரம் (தனி) – ஜெ.பாக்யராஜ்

8. சேலம் – பி.விக்னேஷ்

9. நாமக்கல் – எஸ்.தமிழ்மணி

10. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்

11. கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல்

12. சிதம்பரம் (தனி) – எம்.சந்திரகாசன்

13. நாகப்பட்டினம் (தனி) –

முனைவர். ஜி.சுர்சித் சங்கர்

14. மதுரை – டாக்டர். பி.சரவணன்

15. தேனி – வி.டி.நாராயணசாமி

16. ராமநாதபுரம் – பா.ஜெயபெருமாள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.