;
Athirady Tamil News

காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தும் : சஜித் எச்சரிக்கை

0

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் பல கேள்விகளை முன்வைத்து நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் நேற்று(20) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எரிசக்தி உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் அதிகரித்த முதலீடு உகந்ததாக இருந்தாலும், இத்தகைய திட்டங்களை செயற்படுத்துவதில் சிறந்த மாற்று இடம் மற்றும் மிகவும் பயனுள்ள முதலீட்டு பிரதேசங்களை தெரிவு செய்வது அவசியம்.

நிர்மாணத் திட்டம்
பறவைகள் சரணாலயமாக விளங்கும் மன்னாரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் நிலைய நிர்மாணத் திட்டம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டமாகவே பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் உடன்படுகிறது.

மேலும் டீசல் மாபியாவிற்கு இடமளிக்காது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நடைமுறைப்படுத்துவதில் மாற்று இடங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

பறவைகளின் மத்திய ஆசிய பயணப் பாதையில் மில்லியன் கணக்கான புலம்பெயர் பறவைகளுக்கு இந்தத் திட்டத்தால் ஏற்படும் கடுமையான ஆபத்தை இந்தத் திட்டத்திற்காக நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியும் இந்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை
அறிக்கையில் பல குறைபாடுகள் நிலவுகிறது அத்தோடு விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் நிபுணர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுச்சூழல் காரணிகள் மட்டுமின்றி திட்டத்தை செயற்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை குறித்தும் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.

இந்த ஒப்பந்தம் வழங்குவதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இது தொடர்பான பிற விளைவுகள் குறித்தும் அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா என்பதை அறிய விரும்புகின்றேன்.

இத்திட்டத்திற்கு இதை விட பொருத்தமான பல இடங்கள் உள்ளன என்பதை விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.